திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்ததேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை (இரண்டாம் பகுதி)
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்ததேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை (இரண்டாம் பகுதி)
பண் - வியாழக்குறிஞ்சி
1.குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே.
2. பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே.
3. கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை ஏறியுஞ் சென்றுநின்
றுருவுடை யாளுமை யாளுந்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே.
4.தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே.
5.துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே.
6.பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.
7.தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய அண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே.
8.செய்யதண் தாமரைக் கண்ணனொடுங்
¦ காய்யணி நறுமலர் மேலயனும்
ஐயன்நன் சேவடி அதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே.
9.குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்
களித்துநன் கழலடி காணலுற்றார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.
10.அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி எய்துவரே.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment